Tuesday, November 20, 2012

விண்ணை எட்டும் வீட்டு வாடகை: மும்பைக்கு முதலிடம் சென்னைக்கு 10 வது இடம்


Mumbai Records Maximum Growth Retail Rent Globally


 Goodreturns :Mayura Akilan :Tuesday, November 20, 2012, 14:56 [IST]


டெல்லி: சர்வதேச அளவில் மும்பையில்தான் வீட்டுவாடகை அதிக அளவில் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. சென்னை நகரத்தில் வீட்டு வாடகை 36 சதவிகிதம் வரை உயர்ந்து 10 வது இடத்தில் உள்ளதாம்.
வீட்டு வாடகை நாளுக்கு நாள் உயர்ந்து நடுத்தரமக்களின் கழுத்தை நெறித்து வரும் நிலையில் பெருநகரங்களில் வாடகை உயர்வு குறித்து, கஸ்மேன் அண்டு வேக்பீல்டு என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
சர்வதேச அளவில் ஒப்பிடுகையில், இந்தியாவில் மும்பையில் வாடகை விகிதம் பெருமளவில் உயர்ந்துள்ளது. கொலாபாவில் ஒரு சதுர அடிக்கு ரூ.700 வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு ஜூனில் இருந்த வாடகையை காட்டிலும் 75 சதவீதம் அதிகம்.இதற்கு முக்கிய காரணம், இங்கு தேவை அதிகமாக இருப்பதுதான்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கார்சியா டாவில்லா பகுதி மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகர டைம்ஸ் சதுக்கம் ஆகியவை முறையே வாடகை உயர்வில் 2 மற்றும் 3வது இடங்களை பெற்றுள்ளன. இங்கு வாடகை முறையே 64.7 சதவீதம் மற்றும் 55.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதேபோல் கொல்கத்தாவின் பார்க் ஸ்டீரீட் (53.8 சதவீதம் உயர்வு), சென்னையில் காதர் நவாஸ் கான் ரோடு (36.7 சதவீதம் உயர்வு) ஆகிய பகுதிகளிலும் வாடகை பெருமளவில் உயர்ந்துள்ளன. இவை முறையே வாடகை உயர்வில் 5 மற்றும் 10வது இடங்களை வகிக்கின்றன.
அதிக வாடகை உள்ள இந்திய நகரப்பகுதியில், தலைநகர் டெல்லியின் கான் மார்க்கெட்தான் முதலிடம் வகிக்கிறது. ஆனால், உலக அளவில் 21வது இடத்தில் இருந்து தற்போது 26 இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிந்ததுதான். இவ்வாறு அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment