Monday, September 12, 2011

சொத்துக்களை மதிப்பிடுவதில் உள்ள பிரச்னைகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள்'


தகவல்:தினமலர்:செப்டம்பர் 12,2011,


கோவை : கோவையில் இந்திய மதிப்பீட்டாளர் சங்கத்தின் சார்பில், "சொத்துக்களை மதிப்பிடுவதில் உள்ள பிரச்னைகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள்' என்னும் தலைப்பில், இரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

 இதில், இந்திய மதிப்பீட்டாளர் சங்கத் தலைவர் தியாகராஜன் பேசியதாவது: அரசின் கொள்கை முடிவுகள், புதிய சட்டங்கள், அறிவு, ஆற்றல், துறைசார் மாற்றங்களை உள்வாங்குதல் என, பல்வேறு தளங்களிலும் சொத்து முதலீட்டாளர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

 பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசின் கொள்கை முடிவுகள் காரணமாக, சொத்துக்களின் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. மக்கள் தங்கள் தேவைகள் மற்றும் எதிர்காலப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீட்டுமனைகள், கட்டடங்கள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றனர்.

 இதன் காரணமாக இன்றைக்கு வீட்டு வசதித் துறை, அதீத வளர்ச்சியை எட்டியுள்ளது. உலகமயமாதல், தொழில்மயமாதல் உள்ளிட்டக் காரணிகளால், புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன.

இதனால், ஒவ்வொரு நாளும் புதுப்புது இயந்திரங்கள் உற்பத்தியாவதால், இயந்திரங்களின் மதிப்பும் மாறிக் கொண்டே உள்ளது. நிலம், கட்டடங்கள், இயந்திரங்கள், தங்கம் என, அனைத்துப் பொருட்களின் மதிப்பிலும், தொடர் மாற்றங்கள் நிகழ்வதால் இன்றைக்கு, சொத்துக்களின் மதிப்பைப் பற்றிய புரிதல், அனைவருக்கும் அவசியமாகிறது.

 நாடு முழுவதும் தற்போது, 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்து மதிப்பீட்டாளர்கள் உள்ளனர்.

 சொத்துக்களை வாங்குவோர், விற்போர் மற்றும் வங்கிகள் என, பலரும் நம்மை முழுமையாக நம்பி முதலீடு செய்ய துணிவதால், நமக்கான சமூக பொறுப்பு கூடியுள்ளது.

 எனவே, சொத்துக்களை துல்லியமாக மதிப்பிட்டு, சிறப்பான சேவையை சமூகத்துக்கு தர வேண்டியது நமது கடமை.

நேர்மையும், துல்லியமாக மதிப்பிடும் திறமையும் நம்மிடம் இருக்க வேண்டும். இதற்கு அனைத்துத் துறைகளையும் ஆழமாக அறிந்து கொள்வது அவசியம்.

 இவ்வாறு, தியாகராஜன் பேசினார்.

No comments:

Post a Comment